தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளை அமைப்பின் முதலாம் கூட்டம் இன்று ஜெர்மனியில் எமது த.ம.அ அலுவலகத்தில் நடைபெற்றது.
ஐரோப்பியக் குழு ஆற்ற வேண்டிய திட்டப்பணிகளின் முன்வரைவுகள் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டன. அதில் குறிப்பாக, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களிலும், ஆவணப்பாதுகாப்பகங்களிலும், அருங்காட்சியகங்களிலும் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடி மற்றும் காகித ஆவணங்கள் தொடர்பான நடவடிக்கைகள் பற்றியும், ஐரோப்பிய சூழலில் தமிழ் செயல்பாடுகளின் ஆய்வுப்பூர்வ முன்னெடுப்புக்கள் பற்றியும், தமிழர் புலம்பெயர்வு தொடர்பான சமூக வரலாற்றுத் தகவல்களையும் பதியும் செயல்பாடுகளும் கலந்துரையாடப்பட்டன.
தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர் ஆய்வு நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழ் பௌத்தம் குறித்த ஆய்வு முன்னெடுப்பு இன்று தொடங்கப்பட்டது. தமிழகத்தின் திரு.கௌதம சன்னா இத்திட்டத்திற்கான செயல்திட்ட முன்வரைவை பகிர்ந்து கொண்டார். அவரது ஆலோசனைகள் ஏற்கப்பட்டு இவ்வாண்டு இத்திட்ட செயல்பாடு தொடங்கவுள்ளது. தமிழர் பண்பாட்டில் பௌத்தம் தொடங்கி அது எவ்வாறு உலக அளவில் தமிழர் தடங்களை. அதிலும் குறிப்பாக தென்கிழக்காசியாவில் உருவாக்கியது என்பதை ஆராயும் பணியாக இது அமையும்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளை யுனெஸ்கோவில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்கும். இதற்கான முன்னெடுப்புக்களை முனைவர்.க.சுபாஷிணி மற்றும், திரு.சாம் விஜய் ஆகியோர் மேற்கொள்வர்.
மேலும் பேராசிரியர் நா.கண்ணன், டென்மார்க் திரு.தருமகுலசிங்கம், பேராசிரியர் தோமஸ் லேமான் (ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம்), திரு.குமரன், திரு.மாவை ஸ்ரீகந்தா, திரு.யோகாபுத்ரா, திருமிகு.வினோதினி, திருமிகு.தர்மசீலி, திருமிகு.பிரபாகரி ஆகியோரின் பங்கேற்பிலும் ஒப்புதலிலும் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளை