Home திருவள்ளுவர் 2019

திருவள்ளுவர் 2019

by admin

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டளவில் இயங்கி வரும் ஓர் ஆய்வுக்கு முக்கியத்துவம் தரும் அமைப்பாகும். இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள தமிழர்கள், வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான வரலாற்றியல் ஆய்வுகள் தொல்லியல் ஆய்வுகள், ஓலைச்சுவடி , கல்வெட்டுக்கள், மற்றும் இலக்கியங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் ஊடே தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மேற்கண்ட வரலாறு தொடர்பான அனைத்து தரவுகளையும் மின்னாக்கம் செய்து உலகளாவிய அளவில் தமிழர்களிடையேயும், உலகம் முழுவதும் ஆய்வுகளை மேற்கொள்ளும் கல்வியாளர்களிடையேயும் கொண்டு போய் சேர்க்க தனிப்பெரும் திட்டத்தோடு செயலாற்றி வருகின்றது. தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம்,   யுனெஸ்கோ வழங்கியிருக்கின்ற பன்னாட்டு பண்பாட்டு பாதுகாப்பு நெறிமுறைகளை ஒட்டியே அமைந்திருக்கிறது என்பது இதன் சிறப்பாகும்.

திருக்குறள்  இந்தியாவில் உள்ள தொன்மையான மொழிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் தமிழ் மொழியின் தலையாய நீதிநூலாகக் கருதப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  திருவள்ளுவர் என்கின்ற பெரும் புலவரால் எழுதப்பட்ட இந்நூலில் தத்துவம், அளவையியல், ஏரணவியல், வாழ்வியல், பொருளியல், வணிகம், இல்லறம், தனிமனித நடத்தை உள்ளிட்ட மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து துறைகளைப் பற்றிய மதிப்பீடுகளை முன் வைத்து தனது பாடல்களின் மூலம் விளக்குகிறார் திருவள்ளுவர். இரண்டு வரிகளில் பெரும் கருத்துக்களைப் பொதித்து வைத்துள்ளது இச்செய்யுட்களின் சிறப்பு அம்சமாகும். அந்த வகையில் மனிதர்களை உலக வாழ்வியல் நெறிகளுக்கு இசைந்து வழி நடத்தக் கூடிய அறிவு களஞ்சியமாக இருப்பதாலும், பொதுவாக உலக சமயங்கள் கூறும் நல்லுறைகளை,  “எந்த மதச்சார்புமற்று”  சொன்ன காரணங்களினாலும் உலகப் பொது வழிகாட்டி என்று திருக்குறளை அழைப்பது பொருத்தமாக அமைகிறது.

தமிழ் மரபு அறக்கட்டளை, பன்னாட்டளவில் திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கில் பல பணிகளைச் செய்து வருகிறது. அதில் ஒன்றாகத் திருவள்ளுவரின் சிலையை உலகம் முழுவதும் அமைக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவருகிறது.  

F.W.எல்லிஸ் 1810ல் வெளியிட்ட தங்க நாணயத்தில் பொறிக்கப்பட்ட திருவள்ளுவர் உருவம்


ஐரோப்பியக் கூட்டமைப்பில் முதன் முறையாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக இரண்டு திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட இருக்கின்றன.  அதில் முதலாவது சிலை 1812ம் ஆண்டு தமிழகத்தில் எல்லிஸ் அவர்கள் வெளியிட்ட திருவள்ளுவர் தங்கக்காசுகளில் உள்ள திருவள்ளுவர் உருவத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட ஒன்றே முக்கால் அடி உயரமுள்ள ஐம்பொன் சிலையாகும். தமிழகத்தில் 1812ம் ஆண்டு முதன் முறையாகத் திருக்குறள் தமிழில் அச்சேறியது. F.W.எல்லிஸ் அவர்களது உதவியாளரான  திரு.கந்தப்பனார்  அவர்களுடைய குடும்ப பராமரிப்பிலிருந்து திருக்குறள் ஓலைச்சுவடியைப் பெற்று  செயிண்ட் ஜோர்ஜ் கோட்டை கல்லூரியின் மேலாளராகப் பணியாற்றிய அ.முத்துசாமிப்பிள்ளை அவர்களின் மூலமாகத் தமிழில் பதிப்பித்தார்.

இப்பதிப்பு 1812ம் ஆண்டு வெளிவந்தது. இதன் நினைவாகத் திருவள்ளுவர் உருவம் பதித்த இரண்டு காசுகளை அவர் வெளியிட்டார். அந்தக் காசுகளில் உள்ள உருவமே  ஐரோப்பாவில் மட்டுமன்றி, உலகிலே எல்லிஸ் வெளியிட்ட தங்கக் காசில் உள்ள உருவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் திருவள்ளுவருக்கான முதல் உருவச் சிலையாகவும் அமைகிறது.

இரண்டாவது, மூன்று அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையாகும். இது ஏற்கனவே பொதுவாக வழக்கில் அறிமுகமாகியுள்ள திருவள்ளுவர் உருவ மாதிரியை அடிப்படையாக வைத்தும், தமிழர்களின் உடல் அமைப்பு,  உடை மற்றும் தமிழ் சிற்ப மரபின் அடிப்படையில் அமைந்த முதல் சிலையாகும். இச்சிலையும் ஐம்பொன்னால் செய்யப்பட்டு ஜெர்மனியில் நிறுவப்படுகிறது. மேற்கண்ட இந்த இரண்டு சிலைகளையும் தமிழகத்தின் தலைசிறந்த ஓவியரும் சிற்பியும், கவின் கலைக்கல்லூரியின் முதல்வருமான ஓவியர் சந்ரு அவர்களின் கைவண்ணத்தில் உருவானவையாகும்.

நின்ற வடிவ திருவள்ளுவர் சிலைகள் மாமல்லபுரத்தில் உருவாக்கத்தின் போது – இடதிலிருந்து – திரு.பாலச்சந்திரன் இஆப (ஓய்வு) , திரு.கௌதம சன்னா, சிற்பி சந்ரு., திரு.காந்தி

அமர்ந்த நிலையில் ஒன்றே முக்கால் அடி உயரத்தில் அமைந்த எல்லீஸ் அவர்கள் வெளியிட்ட தங்க நாணயத்தில் உள்ள வடிவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒன்றே முக்கால் அடி உயர ஐம்பொன் சிலைக்கான உருவாக்கச் செலவுத் தொகையை  திரு.பாலச்சந்திரன் இஆப (ஓய்வு) அவர்கள் வழங்கியுள்ளார். இரண்டாவது, நின்ற வடிவ 3 அடி உயர சிலைக்கான உருவாக்கச் செலவுத் தொகையை திரு.கௌதம சன்னா அவர்களும் டாக்டர்.க.சுபாஷிணி அவர்களும் இணைந்து வழங்கியுள்ளனர்.

மேலும் இந்த சிலைகள் வைக்கப்படுகின்ற கண்காட்சி அரங்கத்தின் உள்ளே 1803ம் ஆண்டு வெளிவந்த பாதிரியார் ஃப்ரெடெரிக் காமரர்  எழுதிய திருக்குறளின் முதல் ஜெர்மானிய மொழிபெயர்ப்பு, 1856ம் ஆண்டு டாக்டர்.கார்ல் க்ரவுல் அவர்கள் வெளியிட்ட மொழி பெயர்ப்பு, மற்றும் வீரமாமுனிவர் அவர்கள் வெளியிட்ட திருக்குறளுக்கான முதல் மொழிபெயர்ப்பு ஆகியவற்றோடு தமிழில் முதலில் அச்சு வடிவில் வெளியிடப்பட்ட 1812ம் ஆண்டு வெளியீடான திருக்குறள் பதிப்பு ஆகிய நூல்களும் இங்கு வைக்கப்பட உள்ளன.  இந்த நிகழ்வு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உலகத் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு மாபெரும் நிகழ்வாகும். இந்த நிகழ்வு வருகின்ற டிசம்பர் மாதம் 4ம் தேதி 2019ல் ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநில தலைநகரான ஸ்டுட்கார்ட் நகரிலமைந்திருக்கும் லிண்டன் அருங்காட்சியகத்தில் நிகழவுள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்த சிறப்பு நிகழ்வில் வந்து கலந்து சிறப்பிக்க அழைக்கின்றோம்.