Home ProjectsThiruvalluvar2019 டாக்டர்.தொல்.திருமாவளவன் – விசிக தலைவர்

டாக்டர்.தொல்.திருமாவளவன் – விசிக தலைவர்

by admin
0 comment

ஜெர்மனியில் ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன்
தொல்.திருமாவளவன் அறிக்கை
~~~~~
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் தமது பண்பாட்டையும் அடையாளங்களையும் நிறுவி தனித்தவொரு தேசிய இனம் என்பதை உறுதி செய்து வருகின்றனர். இதனால் வேறுபாடுகளைக் கடந்து தமிழர்கள் என்று ஒருங்கிணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஜெர்மனி நாட்டில் 4.12.2019 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன் முறையாக இரண்டு ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட உள்ளன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படுவதின் மூலம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அறிவித்த தமிழனின் சமத்துவச் சிந்தனையினை ஐரோப்பியர்கள் மீண்டும் தெரிந்துக் கொள்தற்கு ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஐரோப்பாவில் முதன் முறையாக நிறுவப்படும் இரண்டு ஐம்பொன் சிலைகளும் தமிழரின் சிந்தனை மரபுகளையும் பன்முகத் தன்மையினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது. இந்த இரண்டு சிலைகளையும் சென்னை நுண்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் தமிழ் மரவு சார்ந்த கலை ஆய்வுகளில் நிபுணத்தும் பெற்ற ஓவியர் சந்ரு அவர்கள் வடிவமைத்துள்ளார் என்பது பெருமைக்குரியதாகும்.

இந்தச் சிலைகளை நிறுவும் நிகழ்வை ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநில அரசின் ஒப்புதலோடு, தமிழ் மரபு அறக்கட்டளையும் லிண்டன் அருங்காட்சியகமும் இணைந்து நடத்துகின்றன. மேலும் இந்நிகழ்வில் 1803ம் ஆண்டு ஆகஸ்ட் ஃப்ரெடரிக் காமரர் என்பவர் ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்த திருக்குறள் மொழிபெயர்ப்பும், 1856ம் ஆண்டு டாக்டர்.கார்ல் கிரவுல் என்பவர் மொழிபெயர்த்த திருக்குறளின் முழுமையான ஜெர்மானிய மொழி பெயர்ப்பும், தமிழக ஆய்வாளர் கௌதம சன்னா அவர்கள் எழுதிய ‘திருவள்ளுவர் யார் – கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்’ என்கிற நூலும், தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் திரு.கதிரவன் உருவாக்கிய குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருளும், உலகத்தின் பல்வேறு தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு அடங்கிய விழா மலரும் வெளியிடப்படுவது மேலும் சிறப்புக்குரியதாகும்.

இந்த நிகழ்வில் சர்வதேச திருக்குறள் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளைச் சார்ந்த தமிழ் அறிஞர்களும் தமிழ்ச்சங்கங்களின் தலைவர்களும் உரைகளை நிகழ்த்த உள்ளனர். நானும் இதில் உரையாற்றுகிறேன் என்பது பெருமைக்குரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.

மேலும் ஐயன் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் முதன் முறையாக நிறுவப்படும் இந்த நாளை ஐரோப்பியத் தமிழர் நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பினர் முன்னெடுக்கும் முயற்சிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐரோப்பிய மண்ணில் ஐயன் திருவள்ளுவர் சிலைகளை நிறுவும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கும், அவ்வமைப்புடன் இணைந்துப் பணியாற்றும் ஜெர்மனி அரசின் லின்டன் அரசு அருங்காட்சியகத்திற்கும், நிகழ்க்ச்சிகளை ஒருங்கிணைக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர். சுபாஷிணி கனகசுந்தரம் மற்றும் அவ்வமைப்பின் ஜெர்மனி கிளை நிர்வாகத்தினருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் வரலாற்றிலும் உலகத் தமிழர் பதிவுகளிலும் இந்நிகழ்வு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பது பெருமைக்குரியதாகும்.

இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
ஜெர்மனி, ஸ்டுட்கார்ட் நகரம்
04.12.2019

You may also like

Leave a Comment