Home BranchesNetherlands(Dutch) தூத்துக்குடியில் கி.பி 17ம் நூற்றாண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி செயலாக்கமும் வரலாற்று ஆய்வின் தேவைகளும்

தூத்துக்குடியில் கி.பி 17ம் நூற்றாண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி செயலாக்கமும் வரலாற்று ஆய்வின் தேவைகளும்

by admin
0 comment


-முனைவர்.க.சுபாஷிணி

கி.பி. 1658 முதல் 1661 வரையிலான பாதிரியார் பிலிப் பால்டியூஸ் அவர்களது குறிப்புக்கள் தூத்துக்குடி பரதவ மக்களின் சமூக நிலையைப் பற்றிய முக்கியத் தரவுகளை வழங்குகின்றன.

டச்சுக்காரர்கள் போர்த்துக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி துறைமுகப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்த தேவாலயங்களில் இருந்த கிருத்துவ தெய்வ வடிவங்களை அகற்றி தேவாலயத்திற்குள் கிருத்துவக் கோட்பாட்டின் 10 கட்டளைகளைப் பிரதானமாக வைத்து கிருத்துவ நெறிகளை வளர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள முயன்றிருக்கின்றனர். அதுமட்டுமன்றி இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது தேவாலயம் ஓரளவு சேதம் அடைந்திருந்தது. இது தூத்துக்குடி பரதவ மக்களுக்கு டச்சுக்காரர்கள் மேல் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது என்றும் ஒரு முறை தேவாலயத்தை மணியை அடித்து மக்களை ஒன்று திரட்டி தேவாலயத்திற்கு வந்து டச்சுக்காரர்கள் அறிமுகப்படுத்திய புதிய முறையில் வழிபாடு செய்ய அழைத்த போது அவர்கள் டச்சுக்காரர்களை தமது எதிரிகளாகப் பார்ப்பதாகக் கூறியதைப் பாதிரியார் பால்டியூஸ் பதிகின்றார்.

தனது சமய முயற்சி தூத்துக்குடியில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து அவர் வேறு பகுதிக்குச் சென்ற பின்னர் ரெவரண்ட் ஜோன் ஃபெரைரா அல்மெய்டா (Rev. John Fereira Almeyda) என்ற லிஸ்பன் போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த போர்த்துக்கீசியர் அங்கு சமய போதனை செய்ய வந்ததாகவும், ஆனால் அவரும் தனது முயற்சியில் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடுகின்றார். அதுமட்டுமன்றி அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுக்கப்பட்டு தனது சமயத்திலிருந்து விலகியவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டதாகவும், அது மட்டுமன்றி அவரது உருவ பொம்மை கொடும்பாவி கோவாவில் எரிக்கப்பட்டதாகவும் அறிகின்றோம். ஆக, இக்காலகட்டத்தில் போர்த்துக்கீசியர் அறிமுகப்படுத்திய கத்தோலிக்க கிருத்துவமே இப்பகுதியில் ஆழமாக வேரூன்றி இருந்தது என்று அறியமுடிகின்றது.

தூத்துக்குடி பரதவ மக்களின் முக்கியத் தொழிலாக அன்றைய நிலையில் முத்துக்குளித்தலும் மீன் பிடித்தலும், கைத்தறி நெய்தலும் இருந்தன. இன்று முத்துக்குளித்தல் பெருமளவில் குறைந்து விட்டது என்றாலும் ஆழ்கடலில் மூழ்கி சங்கெடுக்கும் தொழில் இன்றும் நடைபெறுகின்றது.

முத்துக்களைப் பற்றி பாதிரியார் பால்டியூஸ் இப்படி விவரிக்கின்றார். முத்துக்கள் ஒரு வகை சிப்பி ஓட்டுக்குள் இருக்கும். இவ்வகை சிப்பிகளைச் சாப்பிட முடியாது. ஓரளவு ஆழ்கடலுக்குள் மூழ்கிச் சென்று தான் இந்த சிப்பிகளைப் பொறுக்கி எடுத்து வர வேண்டும். முத்து எடுத்தல் தொழில் என்பது, ஆண்டில் எல்லா நாட்களிலும் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட சில மாதங்களில் தான் இவை நடைபெறும். சில நேரங்களில் சிப்பிக்குள் மணல் மட்டுமே நிறைந்திருக்கும். முழுமையாகத் தயாராகாத நிலையிலேயே எடுக்கப்பட்ட சிப்பிகள் இவை. இவற்றினால் பலனில்லை. முத்துக்குளிக்கும் பரதவர்கள் திறமையானவர்கள். அவர்கள் ஒரு சில சிப்பிகளை மட்டும் முதலில் கொண்டு வந்து சோதித்து பின்னர் எப்பகுதியில் சிப்பிகளைப் பொறுக்கி எடுக்கலாம் என முடிவு செய்து கொள்வார்கள். அப்படி முத்துக்கள் தயாரான சிப்பிகள் இருப்பது தெரிந்து விட்டால் அவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கடற்கரை பகுதிகளில் கூடாரம் அமைத்துத் தங்கி விடுவார்கள். முத்துக்குளித்தல் காலகட்டம் முடிவுக்கு வரும் வரை அவர்கள் அங்கேயே தங்கியிருப்பார்கள்.

டச்சு கிழக்கிந்திய கம்பெனி இவர்களது ஆழ்கடல் முத்துக்குளித்தல் தொழிலுக்குச் சில பாதுகாப்பு முயற்சிகளை அச்சமயத்தில் ஏற்படுத்தித் தந்ததாகவும், இதனால் முத்துக்குளித்தல் வியாபாரத்தில் வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களுக்கு மக்கள் வழங்கினர் என்றும் அவரது குறிப்புக்கள் சொல்கின்றன. ஆக, டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கு வருமானம் ஈட்டும் ஒரு பகுதியாக இப்பகுதி இருந்துள்ளதை நாம் மறுக்க முடியாது.

பொதுவாகவே பரதவ மக்கள் தூத்துக்குடி சந்தையிலேயே தங்கள் முத்துக்களை அன்று வியாபாரம் செய்தனர். பல நாட்டு வணிகர்களும் அப்பகுதிக்கு வந்து முத்துக்களை வாங்கிச் செல்வது இயல்பாக நடந்திருக்கின்றது. முத்துக்களை நீக்கிய உடைந்த சிப்பிகளின் துகள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இவை ஒருவித மருந்து தயாரிப்பிற்குப் பயன்பட்டதாகத் தெரிகின்றது.

தூத்துக்குடியில் மேலும் ஒரு முக்கியத் தொழிலாக நீண்ட காலம் கைத்தறி தொழில் இருந்தது. இதன் சான்றாக சாயர்புரம் பகுதியில் இன்றும் தறிகள் இயங்கும் ஒலியை நாம் கேட்கின்றோம்.

விவசாய நிலங்களில் அரிசி மற்றும் காய்கறி உற்பத்தியும் தூத்துக்குடி பகுதியில் மக்களின் தொழிலாக இருந்தது என்று பாதிரியார் பிலிப் பால்டியூஸ் சுட்டிக்காட்டுகின்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 19ம் நூற்றாண்டில் இறுதியில் நிகழ்த்தப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் தொடங்கி அண்மைய அகழாய்வுகள் வரை இப்பகுதியில் பல்வேறு இனக்குழு மக்கள் வந்து புழங்கிச் சென்றதற்கான நீண்ட கால சான்றுகளைப் பறைசாற்றுகின்றன. அதன் தொடர்ச்சியினைப் பாதிரியார் பால்டியூஸின் குறிப்புக்களின் வழி கி.பி 17 வாக்கிலும் காண்கின்றோம். இதன் அடிப்படையில் நோக்கும் போது தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடிக்கும் ஒரு மிக முக்கிய நகரங்களில் தூத்துக்குடி சிறப்பிடம் பெறுகின்றது. இங்கு இதுகாறும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளும் சரி, சமூகப் பண்பாட்டுத்தளத்திலான ஆய்வுகளும் சரி, முகச் சிறிய அளவிலேயே நிகழ்த்தப்பட்டுள்ளது என்றே கருதக் கூடியதாக அமைகின்றது. இது வருத்தப்பட வேண்டிய விடயம். மிக விரிவான அகழாய்வுப் பணிகளும் மக்கள் வாழ்வியல் கூறுகளை வெளிப்படுத்தும் சமூக மானுடவியல் கண்ணோட்டத்திலான ஆய்வுகளும் அறிவியல்பூர்வமான கருதுகோள்களின் அடிப்படையில் இப்பகுதியில் நிகழ்த்தப்பட வேண்டியதேவை இருக்கின்றது. இதனைத் தமிழக கல்வி ஆய்வு நிறுவனங்களும், தமிழக அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் துறையும் கவனத்தில் எடுக்க வேண்டியது மிக அவசியம்.

குறிப்பு: A Description of EAST INDIA Coast of MALABAR and CORMANDEL with their adjecent Kingdoms & Proinces & of the Empire of CEYLON and of the Idolatry of the Pagans in the EAST INDIES –

Philip Baldaeus, Minister of the Word of God in Ceylon, Printed in Amsterdam, 1672.

You may also like

Leave a Comment