”பிலிப்பஸ் பால்டியூஸ் தயாரிப்பில் தமிழ் இலக்கணம் – தமிழ் இங்கே மலபார் மொழி எனக் குறிப்பிடப்படுவதையும், ஓலைச்சுவடி எழுத்தாணி தமிழ் நிலத்தில் எழுதும் முறை ஆகியன விளக்கப்பட்டிருப்பதையும் இங்கு காணலாம் – கி.பி.1672.”
பிலிப்பஸ் பால்டியூஸ் தனது மிகப்பெரிய ஆவணப்படைப்பான ” A Description of EAST INDIA Coast of MALABAR and CORMANDEL with their adjecent Kingdoms & Proinces & of the Empire of CEYLON and of the Idolatry of the Pagans in the EAST INDIES” என்ற நூலில் தனது பயண அனுபவங்களையும், செயல்பாடுகளையும், தான் உள்வாங்கிய கருத்துக்களையும் மிக விரிவாகக் குறிப்பிடுகின்றார். அன்றைய தமிழகத்தின் தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகள் மதுரை நாட்டில் இருந்தது என்ற வகையில் குறிப்புகள் இந்த நூலில் வழங்கப்பட்டுள்ளன.
பிலிப்பஸ் பால்டியூஸ் ஹாலந்து (இன்றைய நெதர்லாந்து) நாட்டைச் சேர்ந்த சீர்திருத்துவ கிறித்துவ (Dutch Reformed Church) மத போதகர். இந்த வகை சீர்திருத்த கிருத்துவம் என்பது கத்தோலிக்க கிருத்துவத்தில் மேலும் புதிய சீர்திருத்த சிந்தனைகளை உருவாக்கி வளர்ந்த ஒரு கிளைசமயம். இவர் தத்துவம், கீழைதேச மொழிகள், சமயம் ஆகிய துறைகளில் கல்விகற்று தேர்ச்சி பெற்று பின்னர் தனது சமயப் பணியை மேற்கொள்ல டச்சு கிழக்கிந்திய கம்பெனியில் பணியில் சேர்ந்தவர். தனது பணி காலத்தில், கிழக்காசிய நாடுகள் பலவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்றாலும் தனது பெரும்பாலான காலத்தை அன்றைய சிலோனிலும் இந்தியாவிலும் கழித்தவர். அதிலும் குறிப்பாக தமிழ் மொழியை நன்கு கற்று தமிழ் பாண்பாட்டினையும் சமூகம் சார்ந்த செய்திகளையும் டச்சு, ஜெர்மன் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதியவர் என்ற பெருமை இவருக்குண்டு. மரியா வோன் காசல் என்பவரையும் பின்னர் எலிசபெத் ட்ரிபொலெட் என்பவரையும் இவர் திருமணம் செய்ததாக இவரைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
டச்சு கிழக்கிந்திய கம்பெனியில் ஒரு அமைச்சராக பணியேற்றுக் கொண்ட பின்னர் தனது சமயத்தைப் பரப்பும் நோக்கத்துடன் இலங்கையிலிருந்து தமிழகம் வரும்போது தூத்துக்குடியில் தனது அனுபவங்களை அவர் விவரிக்கும் செய்திகள் நமக்கு அக்காலத்தைய சூழலை விளக்கும் சான்றுகளாக அமைகின்றன. தூத்துக்குடியிலிருந்து தொண்டி, நாகப்பட்டினம், தரங்கம்பாடி, புலிக்கட், என இவரது பயணம் மிக விரிவானது.
தூத்துக்குடியில் முதலில் அவர் சந்தித்த உள்ளூர் மக்கள் பரதவ சமூகத்தவர்கள். இவர்கள் இப்பகுதியில் முன்னரே காலோச்சியிருந்த போர்த்துக்கீசியர்களின் தாக்கத்தினால் கத்தோலிக்க கிருத்துவ சமயத்தை ஏற்றிருந்தனர். ஓரிரு கத்தோலிக்க தேவாலயங்களும் அக்காலகட்டத்தில் அங்கே உருவாக்கப்படிருந்தன.
இந்த மதம் மாறிய தமிழர்கள் தங்கள் கத்தோலிக்க மத நம்பிக்கையில் “வெறித்தனமாக கண்மூடித்தனமாக” நம்பிக்கை கொண்டிருந்தனர் என்றும், தனது புதிய சீர்திருத்த சமயத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி தனது பக்கம் அவர்களை ஈர்ப்பது எளிமையான காரியமாக இல்லை என்றும் தனது நூலில் இவர் குறிப்பிடுகின்றார். அவர்களுக்கு முத்ஹ்டுக்களைக் கோர்த்ஹ்டு அணிகலன்கள் செய்வதற்கும், சிலுவைகளைச் செய்வதற்கும் தான் தெரிகிறதே தவிர கிருத்துவ சமயத்தின் அடிப்படை தத்துவ விசயங்கள் தெரியவில்லை என்றும் குறிப்பிடுகின்றார்.
1661ம் ஆண்டு இவரை டச்சு கிழக்கிந்திய அரசு தூத்துக்குடியிலிருந்து கோவளம் பகுதி வரை பயணித்து இங்கு கடற்கரை பகுதிகளிலுள்ள கிருத்துவ தேவாலயங்கள் எவ்வகையில் இயங்குகின்றன என ஆய்வு செய்து தங்கள் புதிய சமயக் கொள்கையை எவ்வாறு இவர்களிடையே புகுத்தலாம் என அறிந்து வர பணித்தது என்றும், புதிய சமயத்தை அவர்களிடையே அறிமுகப்படுத்துவது எளிதல்ல என்று தாம் உணர்ந்ததாகவும் இவர் குறிப்பிடுகின்றார். ஏனெனில் பரதவ மக்கள் போர்த்துக்கீசியர் அறிமுகப்படுத்திய கத்தோலிக்க கிருத்துவத்தில் மிகத் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்
1658ம் ஆண்டு தூத்துக்குடி கடற்கறை பகுதி டச்சுக்காரர்கள் வசம் வந்தது. இதன் அடிப்படையில் இங்கு இயங்கிய தேவாலயங்களில் மாற்று சித்தாந்தத்தைப் போதிக்கும் முயற்சிகள் இக்கால கட்டத்தில் நிகழ்ந்ததைப் பாதிரியார் பால்டியூஸ் குறிப்புக்கள் வெளிப்படுத்துகின்றன.
பாதிரியார் பால்டியூஸ் இம்மக்களை ஈர்க்க போர்த்துக்கீசிய மொழியிலேயே வழிபாடுகளைத் தொடங்கினார். அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
1658ல் இலங்கையில் நிகம்புவிலிருந்து வந்த டச்சு படைகள் தூத்துக்குடி பகுதியைத் தாக்கி தமது ஆளுமைக்குள் கொண்டு வந்தன. அந்த சமயத்தில் தூத்துக்குடியில் பல நூறு கிராமங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் அவற்றிற்குப் பாதுகாப்பாக மதில் சுவர் இல்லையென்றும், சாக்கடைகள் இல்லையென்றும் வாயிற்கதவுகள் அல்லது கோட்டைக்கதவுகள் இருக்கவில்லை என்றும், மூன்று மிகப்பெரிய அளவிலான தேவாலயங்கள் மட்டுமே இருந்ததாகவும், பெரிய வீடுகள் சில வரிசையாக இருந்ததாகவும் இவரது குறிப்புக்கள் சொல்கின்றன.
டச்சு கிழக்கிந்திய கம்பெனி இப்பகுதியில் ஒரு கோட்டை ஒன்றை கட்ட பல முறை முயற்சித்தும் இது சாத்தியப்படவில்லை. இதற்குக் காரணம் நாயக்க மன்னர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் இதன் காரணத்தால் டச்சு கிழக்கிந்திய கம்பெனி மூன்று தேவாலயங்களில் ஒன்றில் தமது தொழிற்சாலை ஒன்றை நிறுவியது என்பது இந்த நூலின் வழி அறிய முடிகின்றது.
குறிப்பு: A Description of EAST INDIA Coast of MALABAR and CORMANDEL with their adjecent Kingdoms & Proinces & of the Empire of CEYLON and of the Idolatry of the Pagans in the EAST INDIES –
Philip Baldaeus, Minister of the Word of God in Ceylon, Printed in Amsterdam, 1672.
-முனைவர்.க.சுபாஷிணி