Home Books மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2018: தரங்கம்பாடி – சீகன்பால்கும் ஜெர்மானிய தொடர்புகளும்

மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2018: தரங்கம்பாடி – சீகன்பால்கும் ஜெர்மானிய தொடர்புகளும்

by Dr.K.Subashini
0 comment

ஜெர்மனியில் மார்ட்டின் லூதரால் 16ம் நூற்றாண்டு உருவாகி வளர்ந்த லூதரன் அல்லது சீர்திருத்த கிருத்தவ சமயம், இந்தியாவில் முதலில் தன் தடம் பதித்தது தரங்கம்பாடியில். தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் சில நூற்றாண்டுகள் வரை உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை நகரமாக விளங்கியது. டேனீஷ் ஈஸ்ட் இந்தியா வர்த்தக நிறுவனத்தைத் தொடக்கி, தரங்கம்பாடியைத் தமது வர்த்தக அமைப்பிற்குத் தளமாக அமைத்த பின்னர், டென்மார்க்கின் பேரரசர் நான்காம் ஃப்ரெடெரிக் தமிழகத்தில் சமயப் பணிக்காக சீர்திருத்த மறைபரப்பும் பணியார்களை அனுப்பி வைத்தார். ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரான ஹாலே நகரில் இயங்கிக் கொண்டிருந்த ஹாலே கல்விக்கூடத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த பேராசிரியர் ஃப்ரான்ங்கெ தனது மாணவர்கள் இருவரை இப்பணிக்காக அனுப்பி வைக்க எடுத்த முடிவுதான் தரங்கம்பாடி லூதரன் திருச்சபை உருவாகிய நிகழ்வுக்கு வித்தாக அமைந்தது.     லூதரன் திருச்சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர் பார்த்தலோமஸ் சீகன்பால்க் ஆவார். ஜெருசலம் இலவசப் பள்ளிக்கூடத்தினைத் தொடக்கியவர்; தரங்கம்பாடியில் 1712ம் ஆண்டு அச்சகத்தை நிறுவியவர்; தமிழ் மொழியைக் கடமைப்பாட்டுடன் கற்றுத் தமிழ் இலக்கண நூற்களை லத்தீன், ஜெர்மானிய மொழிகளில் எழுதியவர்; தமிழ் மொழியின் சிறப்பினையும் தமிழக மக்களின் இலக்கிய இலக்கண மேன்மையும், வாழ்வியல் கூறுகளையும் ஐரோப்பாவில் விரிவாக அளித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.    

தரங்கம்பாடியின் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கின்றது டேனீஷ் கோட்டை. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது டென்ஸ்போர்க் கோட்டை என்றழைக்கப்படும் இக்கோட்டை. இக்கோட்டைக்குள் இன்று தமிழக தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளோடு இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புராதனச் சின்னங்களும் பாதுகாக்கப்படுகின்றன.    

1616ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி டென்மார்க்கின் பேரரசர் நான்காம் கிறிஸ்டியன், டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனத்துக்கு, தன் நாட்டை பிரதிநிதித்து ஆசியாவில் பன்னிரண்டு ஆண்டுகள் வர்த்தகம் செய்யும் உரிமையை வழங்கினார்.     1620ம் ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சை நாயக்க மன்னரின் அரசவைக்கு வந்து மன்னரைச் சந்தித்து, டென்மார்க் மன்னரின் வர்த்தகம் தொடர்பான விருப்பத்தைத் தெரிவித்து, வர்த்தக புரிந்துணர்வு உடன்படிக்கைத் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் டென்மார்க் மன்னரின் பிரதிநிதியாகிய ஒவே ஜேட். இந்தப் பேச்சு வார்த்தைகள் இரு நாடுகளுக்குமிடையே வணிக ரீதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பை உருவாக்கியது. நாயக்க மன்னர் தரங்கம்பாடியில் டேனீஷ் அரச பிரதிநிதிகள் வந்து தங்கவும், வர்த்தகத்தைத் தொடங்கவும், அங்குக் கோட்டை கட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் பட்டயம் ஒன்று கையெழுத்திடப்பட்டது . இதன் அடிப்படையில் இக்கோட்டை இங்கு அமைக்கப்பட்டது.    

1622ம் ஆண்டு வாக்கில் தரங்கம்பாடியில் டேனீஷ் வர்த்தகத்தைச் செயல்படுத்தும் முழுப் பொறுப்பையும் ரோலான்ச் க்ரெப் எடுத்துக் கொள்ள, ஓவே ஜேட் டென்மார்க் திரும்பினார். தரங்கம்பாடியில் டேனீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைத் தொடங்கிய பின்னரும் கூட, டேனீசாருக்குத் தமிழகத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது ஆரம்பகாலகட்டத்தில் சிரமமான பணியாகவே அமைந்தது.    

வர்த்தக முயற்சிகள் தொடங்கிய பின்னர் போர்த்துக்கீசியர்களும் அரேபியர்களும் அளித்த கடும்போட்டிகளையும் பல இடையூறுகளையும் சமாளித்தே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம். இது ஒரு அரிய முயற்சிதான் எனினும் கூட, ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் அடைந்த வெற்றியைப் போன்ற வெற்றியினை இந்த வர்த்தக நிறுவனம் பெறவில்லை.     டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் முப்பத்து நான்கு ஆண்டுகள் மட்டுமே இயங்கியது. இந்த முப்பத்து நான்கு ஆண்டு காலகட்டத்தில் ஏழு முறை மட்டுமே ஆசிய நாடுகளிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் வந்தன டேனீஷ் கப்பல்கள் . ஆக, ஒரு வெற்றிகரமான வர்த்தக வாய்ப்பினை இந்த டேனீஷ் வர்த்தக முயற்சி அளிக்கவில்லை. ஆயினும் ஜெர்மனியிலிருந்து வந்தடைந்த மறைபரப்பும் பணியாளர்களின் வரவும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த சமூக மாற்றங்களும் குறிப்பிடத்தக்க சமூக, வரலாற்று மாற்றங்களைத் தரங்கம்பாடி மட்டுமன்றி தமிழகத்தின் திருநெல்வேலி, கடலூர், மதராசப்பட்டினம் போன்ற பகுதிகளில் ஏற்படுத்தியது. ஜெர்மனியில் இதன் தொடர்ச்சியாக 18ம் நூற்றாண்டில் ஹாலே கல்விக்கூடத்தில் தமிழ்மொழி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நிலைகளில் தமிழ் மொழி போதிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வும் குறிப்பிடத்தக்கது.    

தரங்கம்பாடி சங்ககாலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக திகழ்ந்துள்ளது. தரங்கம்பாடிக்கு அருகில் உள்ள பொறையாறு குறித்த செய்திகள் அகநானூற்றுப் பாடல்களிலும்(100:11-12) ) நற்றிணையிலும் (131:6-8) இடம்பெறுகின்றன.     இங்கு டேனீஷ் கோட்டைக்கு இடப்புறமுள்ள மாசிலாமணீஸ்வரர் கோயில் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததொரு கோயிலாகும். இது இன்று வழிபாடுகள் இன்றி பராமரிப்பின்றி காணப்படுகின்றது. கடற்கரையை நோக்கியவாறு மிக நேர்ஹ்ட்தியாக அமைக்கப்பட்டது இக்கோயில். இக்கோயிலில் பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் முப்பத்தேழாவது ஆட்சியாண்டில் (கி.பி.1305)ல் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. ‘சடங்கன்பாடியான குலசேகரன் பட்டினத்து உடையார் மணி வண்ணீகரமுடையார்க்கு’ என்று இக்கல்வெட்டு கூறுகின்றது.   இக்கல்வெட்டின் அடிப்படையில் இன்று தரங்கம்பாடி என நாம் அறியும் இவ்வூர் அன்று சடங்கன்பாடி என அழைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது இந்த ஊரை குலசேகரப்பாண்டிய மன்னன் தன் பெயரோடு தொடர்பு படுத்தி குலசேகரப்பட்டீனம் என்று பெயர் மாற்றம் செய்த செய்தியும் இக்கல்வெட்டில்னால் அறிய முடிகின்றது.    

அதே போல தஞ்சை நாயக்கமன்னன் அச்சுதநாயக்கரின் முற்றுப் பெறா ஒரு கல்வெட்டும் இவ்வூரை ”சடங்கன்பாடி” எனக்குறிப்பிடுகின்றது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை தரங்கம்பாடி “சடங்கன்பாடி” என அழைக்கப்பட்டு வந்தமை இக்கல்வெட்டின் வழி அறியப்படுகின்றது. இதே கோயிலில் உள்ள மற்றுமொரு கல்வெட்டு, ‘இதுக்கு தாழ்வு சொன்னார் உண்டாகில் பதினென் விஷயத்துக்கும் கரையார்க்கும் துரோகியாகக் கடவர்களாகவும்” என்று குறிப்பிடுகின்றது. “பதினெண் விஷயம்” என்பது வணிகக் குழுவைக் குறிக்கும் என்று ஆ.சிவசுப்பிரமணியன் தனது ‘தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இக்கோயிலுக்கு வணிகர்கள் கொடைகள் தந்து பாதுகாத்த செய்தியும் கல்வெட்டுக்களினால் அறியமுடிகின்றது.    

பராமரிப்பின்றி இன்று காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புராதனச் சின்னமாகும்.     தமிழக கடற்கரை நகரங்களில் தரங்கம்பாடி முக்கியத்துவம் பெறும் ஒரு நகரமாகும். அதுமட்டுமன்றி ஐரோப்பாவில் அதிலும் குறிப்பாக டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சீர்திருத்தக் கிறித்துவத்தோடு தொடர்பு கொண்ட ஒரு நகரமாகவும் இது முக்கியத்துவம் பெறுகின்றது.     துணை நூல்கள்

  • ஆ.சிவசுப்பிரமணியன், தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி, 2015
  • Daniel Jeyaraj, Bartholomäus Ziegenbalg, the Father of Modern Protestant Mission: An Indian Assessment (Chennai 2006)
  • History of the Tranqubar Mission, J.Ferd. Fenger (Tranquebar 1863)

  பாதிரியார் சீகன்பால்க் அவர்கள் உருவாக்கிய அச்சுக்கூடம், பள்ளிக்கூடம், மாணவர் தங்குவிடுதி, புதிய ஜெரூசலம் தேவாலயம் ஆகியவற்றையும் டேனீஷ் அரசு கட்டிய கோட்டையைப் பற்றியும் விவரிக்கின்றது இந்தப் பதிவு.     இப்பதிவிற்கான ஏற்பாட்டில் உதவிய பேராசிரியர் முனைவர் சிவராமன், புதிய ஜெரூசலம் தேவாலயத்தின் தமிழ் குரு ரெவரண்ட் நவராஜ் ஜெயப்ரதம். திரு வடலூர் சேகர், திரு.ராஜாராம் கோமகன் மேலும் வடலூர் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றி.  

யூடியூபில் காண:  

    அன்புடன் முனைவர்.சுபாஷிணி [தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment