Home BranchesNetherlands(Dutch) தூத்துக்குடி – கி.பி.1672 – வரைப்படக் கலைஞர் பிலிப்பஸ் பால்டியூஸ் (Philippus Baldaeus)

தூத்துக்குடி – கி.பி.1672 – வரைப்படக் கலைஞர் பிலிப்பஸ் பால்டியூஸ் (Philippus Baldaeus)

by admin
0 comment

இந்த வரைப்படத்தில் நாம் காண்பது தமிழகத்தின் தென்கோடி துறைமுக நகரமான தூத்துக்குடி. இது 1672ம் ஆண்டு தூத்துக்குடி நகரம் அமைக்கப்பட்டிருந்த தன்மையை வெளிப்படுத்தும் ஒரு வரைப்பட ஆவணம். இந்த வரைப்படத்தின் அளவு 35.5 x 29 செ.மீ. 

இதனைத் தயாரித்தவர் பாதிரியார் பிலிப்பஸ் பால்டியூஸ். இவர் அடிப்படையில் டச்சுக்காரர். வரைப்பட நிபுணரும் கூட. இவர் நெதர்லாந்தில் பிறந்தவர்.  டச்சு அரசில் அமைச்சராகப் பணிபுரிந்த இவர் இலங்கைக்கு (அன்றையை சிலோன்) பணி நிமித்தம் சென்றார். ஆப்ரஹாம் ரொகேரியசை ( Abraham Rogerius) அடுத்து மிக விரிவாக வட இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றிய சமூக, மொழி, பண்பாட்டுச் செய்திகளை மிக விரிவாக ஆவணப்படுத்தியவர் என்ற பெருமை இவரைச் சாரும். இவரது ஆவணங்கள் தமிழகம் (மலபார்), சோழமண்டலக் கடற்கரை பகுதி நகரங்கள், சிலோன் ஆகிய நிலபகுதிகளை விவரிக்கும்  முக்கியத்தரவுகளாகும்.

இந்த வரைப்படத்தில் பனிமயமாதா ஆலயம் கடலை நோக்கியபடி அமைக்கப்பட்டிருப்பதையும், வீடுகள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். கடற்கரையில் நிறைய படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் சில படகுகள் கடலில் பயணத்தில் இருப்பதையும் காணமுடிகின்றது. கடலில் இருக்கும் படகுகள் மீனவர்களின் மீன்பிடி படகுகள் என்பதற்குச் சான்றாக படகில் இருப்போர் வலை வீசுவதைக் இந்த வரைப்படம் காட்டுகின்றது. இவை மட்டுமன்றி அயலக வணிகர்களின் படகுகள் வேற்று நாட்டு கொடியுடன் உள்ளதையும் காணலாம். இதில் போர்த்துக்கீசியர்களின் அரசு அலுவலகம் போன்ற ஒரு கட்டிடம் கடற்கரையை நோக்கியவாறு இருப்பதையும் அதில் ஒரு கொடி பறப்பதையும் காணலாம்.

ஐரோப்பியர்களால் இந்த நகரம் அன்றைய காலகட்டத்தில் தூத்துக்கோரின் (Tutecoryn or Tuticorin) என அழைக்கப்பட்டது. ஐரோப்பியர்களும் அரேபியர்களும் வணிகம் செய்ய வந்த அன்றைய இந்தியாவின் மிக முக்கியத் துறைமுகப்பகுதிகளில் இந்த நகரமும் அறியப்படுகின்றது.  பண்டைய ரோமானியப் பேரரசு ஆட்சி காலத்திலும் வணிகர்கள் தூத்துக்குடிக்கு வந்து சென்றமை பற்றிய ஆவணக்குறிப்புகள் கிடைக்கின்றன. இது மிக நீண்ட காலமாக இப்பகுதி வணிகர்களை ஈர்த்த ஒரு பகுதியாக இருந்தமைக்குச் சான்றாக அமைகின்றது.வளமான இப்பகுதியில் தான் முத்துக்குளித்தல், சங்கு எடுத்தல் போன்ற தொழில்கள் விரிவாக நடைபெற்றன. முத்துக்கள் கோர்த்து செய்யப்பட்ட ஆபரணங்கள் பண்டைய ரோமானிய  வணிகச் சந்தையில் புகழ் பெற்றிருந்தன.  சங்கினை அறுத்து ஆபரணங்கள் செய்வது தமிழகத்தின் நீண்ட பண்பாடாக இருந்தது. இதற்குச் சான்றாக  தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகளில் நமக்குக் கிடைக்கும் ஆபரணங்களைக் குறிப்பிடலாம்.

-முனைவர்.க.சுபாஷிணி

You may also like

Leave a Comment